'அது ரோட் ஷோவோ ஊர்வலமோ இல்லை' - அல்லு அர்ஜுன் விளக்கம்


It was not a roadshow or procession - Alluarjun
x
தினத்தந்தி 22 Dec 2024 6:55 AM IST (Updated: 22 Dec 2024 10:05 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நடிகர் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, அங்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீதேஜா தற்போதுவரை சிகிச்சையில் உள்ளார்.

இதனையடுத்து, அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இதனையடுத்து, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தநிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நடிகர் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டினார். அதன்படி, 'திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்றும், காரின் கூரை கதவில் இருந்து ரோட் ஷோ செய்தார் என்றும் கூறினார். மேலும் தான் முதல்-மந்திரியாக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது என்றும் கூறினார்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

'3 வருடம் கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படத்தை மக்களோடு சென்று பார்ப்பதற்கு கூட இயலாமல் 15 நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறேன். நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக வருந்துகிறேன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் யாரையும் குறை கூறவில்லை. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அனுமதியோடுதான் தியேட்டருக்குள் சென்றேன். அனுமதி இல்லை என்று சொல்லி இருந்தால் நான் போயிருக்கமாட்டேன். அது ரோடு ஷோவோ ஊர்வலமோ இல்லை. மக்களிடம் கைகாட்டிவிட்டு தியேட்டருக்கு உள்ளே சென்றேன். எனக்கும் அதே வயதில் ஒரு குழந்தை உள்ளது. அந்த வலியை என்னாலும் உணர முடிகிறது. மனித நேயமற்றவன், கெட்டவன், மோசமானவன் என என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். அது மிகுந்த வருத்தமளிக்கிறது. ' என்றார்.


Next Story