ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன் - இயக்குனர் பாலா


ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன் - இயக்குனர் பாலா
x
தினத்தந்தி 26 Dec 2024 9:19 PM IST (Updated: 26 Dec 2024 9:20 PM IST)
t-max-icont-min-icon

'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமாரின் கேள்விக்கு இயக்குநர் பாலா சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலா 25 விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்

நிகழ்வின் வீடியோ ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது, நிகழ்வில் பேசியவர்கள் மற்றும் பாலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என ஒவ்வொரு வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அப்படி, நடிகர் சிவக்குமார் பாலாவிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். குறிப்பாக, 'சிறுவயதில் உங்களைத் தத்துக் கொடுத்தபின் அம்மாவிடம் வளராதது கஷ்டமாக இருந்ததா?' எனக் கேட்டதற்கு, 'ஆமாம். அதனால், சிறு வயதிலேயே மனரீதியாக பாதிப்படைந்தேன்' என்றார். மேலும், "சினிமாவில் நடிகைகள் யாராவது உங்களைக் காதலித்தார்களா?" என்கிற கேள்விக்கு, "இரண்டு, மூன்று பேர் இருந்தார்கள். இப்போது, அவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதால் பெயரைச் சொல்லமாட்டேன்" என நகைச்சுவையாகப் பதிலளித்தார் பாலா.முக்கியமாக, 'நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் உங்களிடம் வந்தால் படம் இயக்குவீர்களா" என சிவக்குமார் கேட்டார். அதற்கு பாலா, "வாய்ப்பு இல்லை. அவர்கள் பாதை வேறு. என் பாதை வேறு" என்றார்.

வணங்கான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.


Next Story