'அதை நினைத்து பெருமையாக உள்ளது' - பாடகி இமான் சக்ரவர்த்தி
பாடகி இமான் சக்ரவர்த்தி கடந்த 2017-ம் ஆண்டு 'துமி ஜாகே பலோபாஷோ' என்ற பாடலுக்காக தேசிய விருது வென்றார்.
மும்பை,
இந்திய சினிமாவின் பிரபல பாடகி இமான் சக்ரவர்த்தி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிரக்தன் படத்தில் இடம்பெற்றிருந்த துமி ஜாகே பலோபாஷோ என்ற பாடலை பாடியிருந்தார். இது இவர் சினிமாவில் பாடிய முதல் பாடலாகும். இப்பாடலுக்காக அவருக்கு அடுத்த ஆண்டு (2017) சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில், அறிமுக பாடலிலேயே தேசிய விருது வென்ற பாடகர் என்ற பெருமையை பெற்ற ஒரு சிலர்களில் இவரும் ஒருவராக உள்ளார். அதே வருடம், அதே பாடலுக்காக இவர் பிலிம்பேர் விருதையும் வென்றார். இந்நிலையில், தான் பன்மொழி பாடகியாக இருப்பதில் பெருமைக்கொள்வதாக இமான் சக்ரவர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
' ஒரு பாடகரோ அல்லது பாடகியோ எப்போதுமே தன்னை தாய் மொழி தவிர்த்து மற்ற மொழிகளிலும் பாட தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். பெங்காலி எனது தாய்மொழியாக இருந்தாலும், பன்மொழிப் பாடகியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இசை உலகளாவியது, அதற்கு மொழி கிடையாது' என்றார்