'இரவு முழுவதும் குடிப்பேன், ஆனால்...' - தீய பழக்கங்கள் குறித்து மனம் திறந்த அமீர்கான்
அமீர்கான் தன்னிடம் இருந்த தீய பழக்கங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மறுபுறம் அமீர்கான் 'லாகூர் 1947' என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் இப்படத்தில் சன்னி திவோல் கதாநாயகனாக நடிக்க பிரீத்தி ஜிந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அமீர்கான் தன்னிடம் இருந்த தீய பழக்கங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒரு காலத்தில் புகையும், மதுவும் அதிகமாக குடிப்பேன். ஆனால், இப்போது நான் குடிப்பதை விட்டுவிட்டேன். நான் குடிக்கும் போது, இரவு முழுவதும் குடிப்பேன். இது ஒரு நல்ல விஷயம் அல்ல, தவறு செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னால் அதை அப்போது நிறுத்த முடியவில்லை' என்றார்.