'அந்த நாள்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்


அந்த நாள் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
x

இயக்குனர் வீ.வீ.கதிரேசன் நரபலியை மையமாக கொண்டு திகில் கதைக்களத்தில் 'அந்த நாள்' படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் வீ.வீ.கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் ஷாம் நடிப்பில் கடந்த 13-ந் தேதி வெளியான படம் 'அந்த நாள்'. இந்த படத்தில் ஆத்யா பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆத்யா, லீமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், வீ.வீ.கதிரேசன் இயக்கிய 'சூது கவ்வும் 2' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

நடிகர் ஆர்யன் ஷாம் இப்படத்தில் சினிமா இயக்குனர் நடித்துள்ளார். அப்போது, தன் குழுவினருடன் புதிய பட வேலைகளுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தங்குகிறார். அங்கு அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. உயிர் பிழைக்க எல்லோரும் பங்களாவை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். அவர்களை முகமூடி மனிதன் கடுமையாக தாக்கி தப்பிக்க விடாமல் தடுக்கிறான்.

பட குழுவினரால் அங்கிருந்து தப்ப முடிந்ததா? அந்த இடத்தில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன? என்பது மீதி கதை. ஆர்யன் ஷாம் கதாநாயகனுக்கான சகல அம்சங்களும் பொருந்தியவராக கதாபாத்திரத்தோடு தன்னை மிக அழகாக பொருத்திக் கொள்கிறார். அமானுஷ்ய சக்தியைப் பார்த்து பயந்தும், பயப்படமாலும் இருக்க வேண்டிய இடங்களில் ஆழமான நடிப்பாற்றலை வழங்கியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் வெளிப்படுத்தும் இன்னொரு பரிமாணம் அவரது நடிப்புக்கு மேலும் புகழ் சேர்க்கிறது.

நாயகி ஆத்யா பிரசாத் அழகை மட்டும் நம்பாமல், கதாபாத்திரத்துக்கு ஏற்ப மிரள வேண்டிய இடத்தில் மிரண்டு அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார். சமையல்காரராக வரும் இமான் அண்ணாச்சிக்கு பழகிய வேடம் என்பதால் பதட்டமில்லாமல் சிரிக்க வைக்கும் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர். திகில் கதைக்கு தேவையான மிரட்டலான இசையைக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம். ரசிகர்களை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் வேலையை சரியாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் சக்திவேல். இரவுக் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

படமாக்குதலில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு வரும் திருப்பங்கள், நரபலிக்கான காரணங்கள் படத்துக்கு பலம் சேர்க்கிறது. நரபலியை மையமாக கொண்ட திகில் கதையை நேர்த்தியாக சொல்லி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் வீ.வீ.கதிரேசன்.


Next Story