சூர்யாவின் உயரம் குறித்து பேசிய பிரபல பாலிவுட் நடிகர்


சூர்யாவின் உயரம் குறித்து பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
x
தினத்தந்தி 24 Oct 2024 8:42 PM IST (Updated: 24 Oct 2024 8:43 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் 'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏ.ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினர் புதுடெல்லியில் படத்திற்கான புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சூர்யா, அனிமல் படத்தில் பாபி தியோலின் பாடி பில்டிங்கை பார்த்து பலரும் மிரண்டு விட்டதாகவும் கங்குவா திரைப்படத்தில் அவருக்கு நிகராக சண்டை போட தான் 49 வயதில் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாகவும் பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய பாபி தியோல், சூர்யாவின் உயரம் குறித்து பேசி உள்ளார். அதாவது "நடிகர் சூர்யாவின் உயரம் இங்கு முக்கியம் கிடையாது. அவர் எவ்வளவு உயரமான இடத்தில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். மனதளவில் உயர்ந்த மனிதர் சூர்யா. அவர் எல்லா சண்டைகளையும் எளிமையாக செய்வார். அப்படி கங்குவா படத்திற்காக செய்யும்போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அது பயங்கரமான விபத்து. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய காயம் ஏற்படவில்லை. இவர் மற்றவர்களுக்கு டப் கொடுப்பவர்" என்று தெரிவித்துள்ளார். பாபி தியோல் புகழ்ந்து பேச சூர்யா எமோஷனலாகி பாபி தியோல் கைகளை பிடித்து போதும் என சொல்வது போல தடுத்தார்.


Next Story