'கேம் சேஞ்சர்' திரைப்பட விமர்சனம்


கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம்
x

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான 'கேம் சேஞ்சர்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 10-ந் தேதி வெளியான இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'கேம் சேஞ்சர்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

மாநில முதல்-மந்திரி நல்லாட்சி வழங்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது மகன் எஸ்.ஜே.சூர்யா பணம், பதவி வெறிப்பிடித்தவராக இருக்கிறார். முதல்வரை கொன்று விட்டு பதவிக்கு வரவும் சதி செய்கிறார். இந்த நிலையில் உடல் நலம் குன்றிய முதல்-மந்திரி தனது அரசியல் வாரிசாக நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம்சரணை அறிவித்து விட்டு இறந்து போகிறார்.

இதனால் ராம் சரணுக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் பகை மூண்டு மோதிக் கொள்கிறார்கள். ராம்சரணை அரசியல் வாரிசாக முதல்-மந்திரி ஏன் அறிவித்தார்? ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா மோதலால் ஏற்படும் திருப்பங்கள் என்ன? என்பது பரபரப்பான மீதி கதை.

ராம் சரணுக்கு மொத்த படத்தையும் தோளில் சுமக்கும் கதாபாத்திரம். தவறை பொறுக்க முடியாத கல்லூரி மாணவன், ஆக்ரோஷமான ஐ.பி.எஸ். அதிகாரி, மிடுக்கான கலெக்டர், தேர்தல் அதிகாரி என பலவித பரிமாணங்களில் அசத்தலான நடிப்பை வழங்கி உள்ளார்.

பிளாஷ்பேக்கில் கிராமத்து தலைவராக வரும் கதாபாத்திரத்தில் யதார்த்த நடிப்பை வழங்கி அனுதாபமும் பெறுகிறார். கியாரா அத்வானி வசீகரிக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம். எஸ்.ஜே.சூர்யா ஆரவாரமான வில்லத்தன நடிப்பில் மிரள வைக்கிறார். ஜெயராம், சுனில் ஆகியோர் சிரிக்க வைக்கின்றனர். அஞ்சலி, ஸ்ரீகாந்த், பிரம்மானந்தம், அச்யுத்குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

தமன் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் பலம். திருவின் கேமரா காட்சிகளை அழகாக செதுக்கி உள்ளது. கிராபிக்ஸ் வியக்க வைக்கின்றன. தேர்தல் அதிகாரி சண்டை போடுவது லாஜிக் மீறல். பிற்பகுதி கதையின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

பணமில்லா தேர்தலும், ஊழலற்ற அரசியலும் சாத்தியப்பட வேண்டும் என்ற கருத்தை, தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக சொல்லி மீண்டும் தன்னை பிரமாண்ட இயக்குனராக நிலைநிறுத்தி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.


Next Story