நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
ராகவா லாரன்ஸின் 25-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும்.
அதனையடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் 'ஹண்டர்', அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். மேலும், 'காஞ்சனா 4' பட பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
ராகவா லாரன்ஸின் 25-வது படத்திற்கு தற்காலிகமாக ஆர்.எல் 25 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்குவதாக படக்குழு கடந்த மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் 25-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணியளவில் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.