'படங்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓ.டி.டியில் வெளியிட வேண்டும்'- தீர்மானம் நிறைவேற்றம்


Films should be released in OTT only after 8 weeks- resolution passed
x
தினத்தந்தி 24 Sep 2024 9:29 AM GMT (Updated: 24 Sep 2024 9:33 AM GMT)

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு:

நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை ஓ.டி.டியில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும்.

1. பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓ.டி.டியில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

2. தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும்.

3. சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் , தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் வைத்துள்ளனர். அதன்படி இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

1. திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையு,ம் ஏசி திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. நம் பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் நிரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.

3.ஆபரேட்டர் உரிமத்துக்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் தாங்கள் அடையவில்லை. ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டதுபோல் ஆபரேட்டர் உரிமம் தேவையில்லை அல்லது எளிய முறையில் ஆபரேட்டர் உரிமம் தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4.மால்களில் உள்ள திரையரங்குகளில் வணிக செயல்பாடுக்கு அனுமதி வழங்கியதுபோல் மற்ற திரையரங்குகளுக்கும் வணிக செயல்பாடுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

5. எம்.எஸ்.எம்.இ விதிபடி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகளை நஷ்டமின்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





Next Story