'பாலிவுட்டில் பெண்களுக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதில்லை' - வித்யாபாலன்


Dont write comedy roles for women in Hindi cinema
x
தினத்தந்தி 28 Oct 2024 1:18 PM IST (Updated: 28 Oct 2024 1:50 PM IST)
t-max-icont-min-icon

மலையாளத்திலும் நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகை வித்யாபாலன் கூறினார்.

சென்னை,

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழில் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் 'பூல் பூலைய்யா 3' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இப்படத்தின் 3-ம் பாகம் வெளியாகவுள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

இப்படம் தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது நவம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இந்தி சினிமாவில் பெண்களுக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் வழங்கப்படாதது குறித்து நடிகை வித்யாபாலன் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இந்தி சினிமாவில் பெண்களுக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மலையாளத்தில் ஊர்வசி சேச்சி உள்ளார். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்த நடிகை. ஊர்வசி மற்றும் ஸ்ரீதேவி போன்ற நடிகைகள் நகைச்சுவை கதாபாத்திரங்களை எளிதாகக் கையாண்டார்கள், ஆனால் சமீபகாலமாக வேறு எந்த நடிகைகளிடமும் அதைப் பார்த்ததில்லை.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது. அதனால்தான் சமூக ஊடகங்களில் நகைச்சுவையான கருத்துகளை வெளியிடுகிறேன்,' என்றார். மேலும், மலையாளத்திலும் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அது நடக்க நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்றும் வித்யா பாலன் கூறினார்.


Next Story