"லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம்- நடிகை நயன்தாரா வேண்டுகோள்


லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்- நடிகை நயன்தாரா வேண்டுகோள்
x

நீங்கள் பலரும் எனக்கு “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

நயன்தாரா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அதில் தன்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையில் " நான் ஒரு நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்பதற்கான என் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும். என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது, உங்கள் நிச்சயமற்ற அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் எனக்கு "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை "நயன்தாரா" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது-ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.

நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதை கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது-அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்! " என்று கூறியுள்ளார்.


Next Story