விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் 'நேசிப்பாயா' ரிலீஸ் அப்டேட்
‘நேசிப்பாயா’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளி்யாகியுள்ளது.
சென்னை,
2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் 'அறிந்தும் அறியாமலும், பட்டியல்' போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஆரம்பம்' மூலம் மீண்டும் அஜித்துடன் கைகோர்த்தவர், பிறகு பாலிவுட்டுக்கு சென்றார். 'ஷெர்ஷா' என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தி படத்தை இயக்கி முடித்த நிலையில், மீண்டும் அஜித்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிமுக நடிகருடன் கைகோர்த்தது ஆச்சரியமாகவும், அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவும் அமைந்தது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜயின் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் 'நேசிப்பாயா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளி்யாகியுள்ளது.