'விடுதலை 2' ஓ.டி.டியில் கூடுதலாக 1 மணி நேர காட்சிகள் - இயக்குனர் வெற்றிமாறன்
‘விடுதலை’ படத்தின் 3ம் பாகம் குறித்த கேள்விக்கு இப்போது இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
'விடுதலை 2' திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறனிடம் மூன்றாம் பாகம் உருவாகுமா என கேட்கப்பட்டது. இன்னொரு தீவிரமான பயணத்திற்கு இப்போது நான் தயாராக இல்லை. ஏற்கனவே விடுதலை படத்திற்காக நிறைய காட்சிகளை படமாக்கி விட்டோம். முதல், இரண்டாம் பாகம் மற்றும் திரைப்பட விழா வெர்ஷன் என ஏகப்பட்ட படப்பிடிப்பை நடத்தி விட்டோம். தற்போது மட்டும் மொத்தமாக எட்டு மணிநேர படமாக விடுதலை உள்ளது.
'விடுதலை 2' ஓடிடியில் ஒரு மணிநேரம் கூடுதலாக வெளியாகும் என தெரிவித்துள்ளார். அத்துடன் முதலில் விடுதலை 2 படத்தை விஜய் சேதுபதி பார்வையில் கொண்டு போக இருந்தோம். ஆனால் ரிலீசுக்கு ஒருநாள் முன்பாகதான் சூரி பார்வையில் கதை போவதை மாற்றியமைத்தோம். சூரி வேறு படத்தில் பிசியாக இருந்தாலும், டப்பிங் பேசி கொடுத்தார். அதன்பின்னர் ரிலீசுக்கு முன்பாகதான் படத்தில் 8 நிமிடத்தைக் குறைத்தோம் என்று கூறியுள்ளார்.
'விடுதலை 2' ரிலீசுக்கு முந்தைய நாள் வரை பல அதிரடி மாற்றங்களை வெற்றிமாறன் செய்துள்ளதாக பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் விடுதலை 3 இல்லையென அவர் தெரிவித்துள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசலை இயக்கவுள்ளார்.