திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
திரையரங்குகளில் கட்டண உயர்வு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் இன்று விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஏசி அல்லாத திரையரங்குக்கு 2 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படும். திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து திரையரங்குகள் உரிமையாளர்கள் இன்று விளக்கம் அளிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.