'தங்கலான்' படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடையில்லை...சென்னை ஐகோர்ட்டு அதிரடி


Cant ban release of Thangalan on OTT - Chennai High Court
x
தினத்தந்தி 21 Oct 2024 7:56 AM GMT (Updated: 21 Oct 2024 8:08 AM GMT)

'தங்கலான்' படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து, விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஓ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியான படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து 'தங்கலான்' விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story