முன்னாள் காதலன் உள்பட 2 பேரை கொலை செய்த பாலிவுட் நடிகையின் சகோதரி
வீட்டிற்கு தீ வைத்து முன்னாள் காதலன் மற்றும் அவரது தோழியை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி. இவர் இந்தியில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நர்கிஸ் பக்ரியின் சகோதரி ஆலியா பக்ரி (வயது 43). இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பெர்சன்ஸ் பொலிவ்யார்டு நகரில் வசித்து வருகிறார்.
இதனிடையே, ஆலியா பக்ரியும், எட்வர்டு ஜாக்கப் (வயது 35) என்ற நபரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 2ம் தேதி காலை 6 மணியளவில் ஆலியா பக்ரி நியூயார்க்கின் ஜமைக்கா பகுதியில் வசித்து வந்த முன்னாள் காதலன் எட்வர்டு ஜாக்கப் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் எட்வர்டு ஜாக்கப்பும் அவரது தோழி அனஸ்டினா இடினி (வயது 33) இருந்துள்ளனர். இதையடுத்து, எட்வர்டு வீட்டிற்கு ஆலியா தீ வைத்துள்ளார். வீட்டின் பின்புறம் கார் நிறுத்தும் இடத்தில் தீ வைத்துள்ளார். பின்னர் அந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
வீட்டின் மேல்மாடியில் தூங்கிக்கொண்டிருந்த எட்வர்டு தீயில் சிக்கிக்கொண்டார். அவரை காப்பாற்ற அனஸ்டினா சென்றுள்ளார். ஆனால், தீ வேகமாக பரவிய நிலையில் கடும் புகையால் மூச்சுத்திணறியும், தீயில் சிக்கி எட்வர்டும் அவரது தோழி அனஸ்டினாவும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலியா பக்ரி மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஆலியா பக்ரியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். ஆலியா பக்ரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
வீட்டிற்கு தீ வைத்து முன்னாள் காதலன் மற்றும் அவரது தோழியை நடிகை நர்கிஸ் பக்ரியின் சகோதரி ஆலியா பக்ரி கொலை செய்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.