பாக்ஸ் ஆபிஸில் மந்தமான 'பரோஸ்' - 'பணத்திற்காக அல்ல, அன்புக்காக' - நடிகர் மோகன்லால்
பாக்ஸ் ஆபிஸில் 'பரோஸ்' மந்தமானநிலையில், படத்தை பணத்திற்காக அல்ல , அன்புக்காக எடுத்ததாக மோகன்லால் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் மோகன்லால் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இது இவர் இயக்கிய முதல் படமாகும். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி 6 நாட்களாகி உள்ளநிலையில் ரூ. 9 கோடி வசூலித்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் 'பரோஸ்' மந்தமானநிலையில், படத்தை பணத்திற்காக அல்ல , அன்புக்காக எடுத்ததாக மோகன்லால் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு கொடுத்து வரும் மரியாதைக்காகவும், அன்புக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் அவர்களுக்கு நான் கொடுத்த பரிசு. அதை நான் பணத்திற்காக எடுக்கவில்லை. குடும்பமாக குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க அதை கொடுத்துள்ளேன்' என்றார்.