இளம் இசைக் கலைஞர்களுக்கு 'பாரத் மேஸ்ட்ரோ விருது' - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு
கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க ஏ. ஆர். ரகுமான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து 'பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை' வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சென்னை,
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து 'பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை' வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து, ஏ.ஆர் ரகுமான் தெரிவித்திருப்பதாவது, "'பாரத் மேஸ்ட்ரோ விருதுகள்' என்பது ஒரு விருது என்பதையும் தாண்டி, இது கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால இசையை இணைப்பது குறித்த ஒன்று, நம் அனைவரையும் ஒலி என்ற மொழியால் ஒன்றிணைப்பதாகும். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது மூலம், ஒரு சுற்றுச்சூழல் கட்டமைப்பை ஏற்படுத்த தாம் விரும்புவதாகவும், அதில் இசை சார்ந்த ஆழமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த இசை வித்வான்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளார் விருது', அதேபோல, இசைத் துறையில் சாதித்து வரும் இளம் தலைமுறை இசைக் கலைஞர்கள் நால்வருக்கு 'இளம் இசைக் கலைஞர்கள் ஸ்டெல்லார் விருதுகள்' என்ற பிரிவில் விருதும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் பணப் பரிசும் வழங்கப்படவுள்ளது. மேலும், ரகுமானுடன் இணைந்து இசைக் கச்சேரியில் பாடும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கிளாசிக்கல் இசையில் திறமையானவர்களை ஊக்கப்படுத்தி பாரம்பரிய இசையை போற்றி வரும் மாநிலத்துக்கு 'இசைப் பங்களிப்புக்கான மாநில விருது' என்ற பிரிவில் விருதும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது