'வேட்டையன்' படத்தின் ஆல்பம் ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்த அனிருத்
லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி வெளியானது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'மனசிலாயோ, ஹண்டர் வண்டார்' ஆகிய பாடல்கள் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், 'வேட்டையன்' படத்தின் முழு ஆல்பத்தை (9 பாடல்கள்) விரைவில் வெளியிடுவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவை அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.