தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து அல்லு அர்ஜுன் விடுவிப்பு
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் அல்லு அர்ஜுன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். கடந்த 2003 ல் வெளியான 'கங்கோத்ரி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்போது புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் அல்லு அர்ஜுன், தேர்தல் விதிமீறல் வழக்கு ஒன்றில் சிக்கி இருந்தார். அதாவது ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் அல்லு அர்ஜுன் ஒய்.எஸ்.ஆர். வேட்பாளர் ஷில்பா ரவி சந்திர கிஷோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நந்தியாலாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார். இதனால் அல்லு அர்ஜுன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது.
அதற்கு அல்லு அர்ஜுன், தனது நெருங்கிய நண்பர் கிஷோர், நந்தியாலயா தொகுதியில் போட்டுவிட்டதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டிற்கு தான் சென்றதாகவும், அதனை அறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நான் தேர்தல் விதியை மீறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
எனவே தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யும்படி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் ஆந்திர ஐகோர்ட்டு இந்த வழக்கில் இருந்து அல்லு அர்ஜுனை விடுவித்துள்ளது. இந்த தகவல் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.