'டிமான்ட்டி காலனி 3' படப்பிடிப்பு பணியில் அஜய் ஞானமுத்து
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் 'டிமான்ட்டி காலனி 3' மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
சென்னை,
கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி 2' கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது.
இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், ஜப்பானில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து மூன்றாம் பாகத்திற்கான பிரீ புரொடக்சன் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.