சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை ஸ்ரீலீலா?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பெரியசாமி ராஜ்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையில் 'புறநானூறு' திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணத்தால் இதில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவி மற்றும் நிவின் பாலி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது 'புறநானூறு' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர் மகேஷ் பாபுவுடன் 'குர்ச்சி மாடதப்பெட்டி' மற்றும் அல்லு அர்ஜுனுடன் 'கிஸ்ஸிக்' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.