'விடாமுயற்சி' படத்தில் இணைந்த நடிகை ரம்யா
நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அறிவித்திருக்கிறது.
தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான மொழி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். கடந்த 2004-ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர், அடுத்து கலக்கப்பபோவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்திய அவர், மங்காத்தா, ஓகே கண்மணி, மாஸ், வனமகன், ஆடை, மாஸ்டர் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக சங்கத்தலைவன் படம் வெளியானது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஜே ரம்யா அவ்வப்போது தனது புகைப்படம மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.