மணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக நடிக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடி

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
சென்னை,
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தக் லைப்'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையடுத்து மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், மணிரத்னம் தயாரித்து இயக்கும் இந்த படம் இந்தியில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திரையுலகின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர்களின் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாக இருக்கும்.
கடந்த 2007-ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய படத்தில் இருவரும் இணைந்து நடித்தால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.