மூன்று 'கான்'களும் இணைந்து நடிக்கவுள்ளோம் - நடிகர் அமீர் கான்


மூன்று கான்களும் இணைந்து நடிக்கவுள்ளோம் - நடிகர் அமீர் கான்
x

சல்மான் கான், ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா ஜெட்டாவில் வரும் 14ம் தேதிவரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இதன் துவக்க விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில் இந்திய நடிகர் அமீர்கானும் அழைப்பின் பேரின் கலந்துகொண்டார். இந்த விழாவில் அமீர்கானுடன் கரீனா கபூர், வில் ஸ்மித், வின் டீசல். ஸ்பைக் லீ ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் செங்கடல் திரைப்பட விழாவில் எகிப்திய நடிகை மோனா ஜகி உடன் அமீர்கானுக்கு கவுரவ விருது அளிக்கப்பட்டது. உலக சினிமாவில் அமீர்கானின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த கவுரவம் செய்யப்பட்டாதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களையும், வித்தியாசமான நடிப்பையும் வழங்கியபடி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் இருந்து பிரகாசித்து வருபவா், அமீர்கான். யாதோன் கி பாரத் சினிமா மூலம் பாலிவுட்டில் நுழைந்த அமீர்கான், 1988-ம் ஆண்டு வெளியான 'கியாமத் சே கியாமத் தக்' படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்தார். வெற்றிப்படமாக அமைந்த அந்த படத்தின் வாயிலாக, பாலிவுட் ரசிகர்கள் அமீர்கானை ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து 'லகான்', 'ரங்க் தே பசந்தி', 'கஜினி', '3 இடியட்ஸ்', 'தூம் 3', 'பி.கே.', 'தங்கல்' போன்ற படங்கள் அமீர்கான் நடிப்பில் உச்சம் தொட்ட படங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் 'பி.கே.' படம், பாலிவுட்டில் முதன் முறையாக ரூ.800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் என்ற சிறப்புக்குரியது.

1994-ம் ஆண்டு வெளியாகி 6 பிரிவுகளில் ஆஸ்கார் விருதை வென்ற ஹாலிவுட் படம் 'பாரஸ்ட் கம்ப்.' இந்தப் படத்தைத்தான் சிறிய மாற்றங்களுடன், ரீமேக் செய்து 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் எடுத்திருந்தார், அமீர்கான். இவரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


திரைப்பட விழாவில் அமீர்கான் பேசியதாவது, 'எனக்கு தெரிந்து சல்மான் கானும் ஷாருக்கானும் இணைந்து நடிக்க ரெடியாகத் தான் இருக்கிறார்கள். நாங்கள் மூன்று பேரும் இணைந்து நடிப்பதை விரும்புகிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக இருந்த போது, இது குறித்து பேசினோம். நான் தான் முதலில் சொன்னேன். அதோடு மூன்று பேரும் சேர்ந்து நடிக்காமல் இருப்பதும் நமக்கு வருத்தம்தான் என்றேன்' என்றார்.

அமீர் கான் நடித்த 'சிதாரே ஜமீன் பார்' படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது.


Next Story