இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகும் அனுரா குமார திசநாயகே
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே 50 சதவீத வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக அனுரா குமார திசநாயகே தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் அனுரா குமார திசநாயகேவை வெற்றியாளராக அறிவித்துள்ளனர்.
அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கேவின் நெருங்கிய கூட்டாளியான இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனிடையே வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் வலைதளத்தில், “நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் இப்போது தெளிவாக உள்ளன. நான் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதிலும், இலங்கை மக்கள் தமது முடிவை எடுத்துள்ளனர், மேலும் அனுரா குமார திசநாயகேவுக்கான அவர்களின் ஆணையை நான் முழுமையாக மதிக்கிறேன். ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது முக்கியம், நான் அதை தயக்கமின்றி செய்கிறேன். அனுரா குமார திசநாயகே மற்றும் அவரது கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.