இலங்கை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டி - 75 சதவீத... ... இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே?
x
Daily Thanthi 2024-09-22 01:11:45.0

இலங்கை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டி - 75 சதவீத வாக்குகள் பதிவு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் சுயேச்சையாக களமிறங்கினார். ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள்சக்தி முன்னணி சார்பில் களம் கண்டார்.

மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

எனினும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அனுரா குமார திசநாயகே ஆகிய மூவருக்கு இடையில் தான் கடுமையான மும்முனை போட்டி நிலவியது.

2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். இவர்களுக்காக இலங்கையின் 22 மாவட்டங்களில் 13,400-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்பாகவே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் கொழும்புவில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் சென்று வாக்களித்தார். தேர்தலை நடத்தும் பணிகளில் சுமார் 2 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்ய நாடு முழுவதும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த தேர்தலில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் இருந்து 78 பிரதிநிதிகளும், காமன்வெல்த் அமைப்பில் இருந்து 22 பிரதிநிதிகளும், ஆசியான் தோ்தல் கண்காணிப்பு அமைப்பில் இருந்து 9 பிரதிநிதிகளும் அதிபர் தேர்தலை பார்வையிட்டனர்.

இலங்கையை பொறுத்தவரையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 70 லட்சம் பேரில் 90 லட்சம் பேர் பெண்கள் ஆவர். அந்த வகையில் நேற்றைய தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர். அதேபோல் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story