அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் செல்ல திட்டம்..!!
காசா-எகிப்து இடையேயான ரபா எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுப்புவதற்காகவும், போர் முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காகவும் 5 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால் இந்த செய்தியை இரு தரப்பும் மறுத்து உள்ளன. ‘காசாவில் அடுத்து வரும் சில மணி நேரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என எந்தவொரு தரப்பிலிருந்தும் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை’ என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சலமா மாரூப் தெரிவித்தார்.
இதைப்போல எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் தெரிவித்தது.
காசா மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக அவர் தனது கொலராடோ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். எனினும் இஸ்ரேல் பயண திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இஸ்ரேல்-காசா இடையே நடந்த 5 போர்களிலும் மிகவும் கொடியதாக மாறியிருக்கும் இந்த போரின் போக்கு மேலும் விரிவடையும் அச்சம் நிலவுவதால் சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.