கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர் தாக்குதல்: 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல்


கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்  தாக்குதல்: 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல்
Daily Thanthi 2022-07-07 21:01:28.0
t-max-icont-min-icon

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 135வது நாளாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன.

அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. அந்த நகரங்கள் மீது ரஷிய படைகள் இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வகையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் டொனெட்ஸ்க் மாகாணத்தில் வசிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாவ்லோ கைரிலென்கோ வலியுறுத்தி உள்ளார். இதனிடையே உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story