உக்ரைன் சிறுவர்களின் உதவிக்காக நோபல் பரிசை விற்கும் ரஷிய பத்திரிகையாளர்...!
நியூயார்க்,
ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ். தனது பத்திரிகையில் அதிபர் புதின் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் டிமிட்ரி, நாட்டில் பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ஆவார். இதற்காக அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தங்க பதக்கமும், 5 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 89 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர்களுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க டிமிட்ரி முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்க பதக்கம் ஏலம் விடப்படுவதாகவும், அதில் கிடைக்கும் தொகை நேரடியாக யுனிசெப் அமைப்புக்கு செல்லும் எனவும் டிமிட்ரி அறிவித்துள்ளார்.
பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.