தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வதற்கான வியூகம் - பா.ஜனதா மேலிட தலைவர்கள் பங்கேற்பு
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், கருத்து கணிப்பு முடிவுகளை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்த நாளில், அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
நேற்று முன்தினம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். முதலில், தபால் வாக்குகளை எண்ணி அறிவிக்க வேண்டும் என்றும், ஓட்டு எண்ணிக்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதுபோல், பா.ஜனதா குழுவும் தேர்தல் கமிஷனை சந்தித்தது. தேர்தல் முறையை சிறுமைப்படுத்த ‘இந்தியா’ கூட்டணி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது.
இந்நிலையில், பா.ஜனதா மேலிட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாளில் நடந்ததால், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை விவரம் குறித்து பா.ஜனதா தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், கருத்து கணிப்புக்கு பிந்தைய அரசியல் நிலவரம் குறித்தும், ‘இந்தியா’ கூட்டணியின் தொடர் சந்திப்புகள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வதற்கான வியூகம் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.