தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
x
Daily Thanthi 2024-06-03 22:56:36.0

தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - சத்யபிரத சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக நியமிக்கப்பட்ட 58 பார்வையாளர்களும் வந்துவிட்டனர். இந்திய தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும்.

தபால் வாக்குகளை எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் அங்குள்ள அரசியல் கட்சி முகவர்களுக்கு அறிவிக்கப்படும். மேலும், அங்குள்ள கரும்பலகையில் எண்ணிக்கை விவரங்கள் எழுதி வைக்கப்படும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் அனைத்து சுற்றுகளிலும் எண்ணப்பட்ட பிறகு, அதனுடன் தபால் வாக்கு எண்ணிக்கை கூட்டப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி ஒருவேளை 8.30 மணிக்கு முன்னரே முடிந்துவிட்டால், அது முடிந்த நேரத்தில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை முடியாமல் காலை 8.30 மணியை தாண்டிச்சென்றுவிட்டது என்றாலும், 8.30 மணிக்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கப்பட்டுவிடும்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஏதாவது புகார்கள் வந்தால், அதைப் பெற தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரியும், பார்வையாளரும் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படும்

வாக்கு எண்ணிக்கையின்போது ஏதாவது 5 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அந்த எண்ணிக்கை அதன் தொடர்புடைய வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப்படும். வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்ற புகார் எழுந்தால், அதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுப்பார்.

தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6-ந் தேதியுடன் முடிவுக்கு வரும். மறுவாக்கு எண்ணிக்கை தேவைப்படும் என்ற பட்சத்திற்காக 5 மற்றும் 6-ந் தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story