சீதாராம் யெச்சூரி- வாழ்க்கை குறிப்பு


சீதாராம் யெச்சூரி- வாழ்க்கை குறிப்பு
Daily Thanthi 2024-09-12 11:22:11.0
t-max-icont-min-icon

சீதாராம் யெச்சூரி 1952 -ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் பிறந்தவர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர் பெயர் சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி- கல்பாகம் யெச்சூரி . இவரது தந்தை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராக இருந்தார். தாயாரும் அரசு அதிகாரி ஆவார்.

யெச்சூரி தனது பத்தாம் வகுப்பு வரை ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் படித்தார்.பின்னர் டெல்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார். உயர்நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றவர். பின்னர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ., பட்டமும் பெற்றார். நெருக்கடி நிலையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

யெச்சூரி 1974 இல் இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார். பின்னர் அடுத்த ஆண்டே அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) சேர்ந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.1984 -ல், அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 1992 -ல் பொலிட்பீரோவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015 -ம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளரான அவர் 2018 -ம் ஆண்டு மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2022-ம் ஆண்டு கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் 3-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யெச்சூரி சிறந்த எழுத்தாளர், அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். யெச்சூரி 2017 இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை (ராஜ்யசபா) பெற்றார். முதல் முறையாக

2005 இல் மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார்.யெச்சூரியின் முதல் மனைவி பெயர் இந்திராணி மஜும்தா. பின்னர் பத்திரிகையாளர் சீமா சிஸ்டியை திருமணம் செய்துள்ளார்.அவரது மகள் அகிலா யெச்சூரி வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆசிரியராக உள்ளார். மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா காரணமாக 34 வயதில் இறந்துவிட்டார்.


Next Story