உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுக்காது என அந்நாட்டு அதிபா் புதின் தொிவித்துள்ளாா்.இது தொடா்பாக ரஷிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, உக்ரைனில் தானிய ஏற்றுமதியை பொறுத்த வரையில் நாங்கள் அதில் தலையிட வில்லை. அங்கு தானியங்களை ஏற்றுமதி செய்ய பல வழிகள் உள்ளன. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யலாம்.
உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கண்ணிவெடியை அகற்றும் போது ரஷ்யா எந்த தாக்குதலையும் நடத்தாது. இதனை நான் ஏற்கனவே கூறி உள்ளேன். தானியங்களை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கும், அசோவ் மற்றும் கருங்கடல்களில் கப்பல்கள் பாதுகாப்பாக நுழைவதையும் உறுதி செய்ய ரஷ்யா தயாராக உள்ளது என்றார்.
முன்னதாக உக்ரைன் நாட்டின் தானியங்களை ரஷ்யா திருடி மற்ற நாடுகளுக்கு விற்பதாக துருக்கி நாட்டிற்கான உக்ரைன் தூதா் வாசில் போட்னர் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.