ரஷியா தாக்குதல் பலமானவை
உக்ரைனில் நடந்துள்ள போர்க்குற்றங்களுக்கு ரஷியாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன.
உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, கிழக்கு டான்பாஸ் பகுதியில் சண்டை கொடூரமாக நடக்கிறது. செவிரோடொனெட்ஸ் நகரைப்பிடிப்பதற்கு ரஷிய படைகள் நடத்தி வருகிற தாக்குதலில் சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பல நகரங்களில் ரஷியாவின் தாக்குதல்கள் பலமாக உள்ளது என குறிப்பிட்டார்.
அதேநேரத்தில் உக்ரைன் படைகளின் எதிர்ப்பை அவர் பாராட்டினார். வெற்றி நமதாக இருக்கும் என்றும் அவர் சூளுரைத்தார்.
ஆனால் ரஷிய அதிபர் மாளிகை கூறுகையில், “ரஷியா முன்னேற்றங்களை கண்டுள்ளது. தனது நோக்கங்களை அடையாமல் ரஷியா விட்டு விடாது” என குறிப்பிட்டது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் 5 தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் குறிப்பிடுகையில், “ரஷியா இப்போது சாதித்து வருகிறது. அது தந்திர உபாய வெற்றி, ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் தனது வளங்களை அது விலையாகக் கொடுத்துள்ளது” என தெரிவித்தது.