‘அமெரிக்க வாழ் இந்தியர்களை பெருமைப்படுத்தியதற்காக ஜோ பைடனுக்கு நன்றி’ - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஜனாதிபதி பைடனின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நட்புக்கு நன்றி. நான் பிரதமராக பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்கு பலமுறை வந்துள்ளேன். இன்று முதல் முறையாக இத்தனை இந்திய-அமெரிக்கர்களுக்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அமெரிக்காவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். எங்கள் உறவின் உண்மையான பலம் நீங்கள். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இந்த கவுரவத்தை வழங்கி பெருமைப்படுத்தியதற்காக ஜனாதிபதி பைடன் மற்றும் டாக்டர் ஜில் பைடனுக்கு மிக்க நன்றி.
அதிபர் ஜோ பைடனும், நானும் இன்னும் சிறிது நேரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளோம். எங்கள் பேச்சு சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.