அமைச்சர் செந்தில்பாலாஜி கைது: பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றவர்கள் கைது!
2011-2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையின் நிறைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை கொண்டாட முயன்றவர்கள் கரூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலையில் அகில இந்திய சட்ட உரிமை கழக நிர்வாகிகள் கரூரில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அமைச்சரின் கைதை கொண்டாட முயன்ற போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.