கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் வீரர்கள்


கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் வீரர்கள்
Daily Thanthi 2023-10-15 14:15:21.0
t-max-icont-min-icon

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 7-ந்தேதி போர் வெடித்தது. அப்போது முதல் இஸ்ரேல் ராணுவம், காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இதில் காசா நகரம் பேரழிவை சந்தித்து வருகிறது.ஏற்கனவே உயிருக்கு பயந்து சுமார் 4.23 லட்சம் மக்கள் காசாவைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் ஐ.நா. ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த சூழலில் காசாவின் வடக்கு பகுதி போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம் அங்கு வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்தது. தற்போது மேலும் 3 மணி நேரம் கெடு விதித்து இருக்கிறது. இதனால், இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்கிற அச்சத்தால் வடக்கு காசா மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

மக்கள் தங்களது உடைமைளை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தெற்கு காசா நோக்கி சென்று வருகின்றனர். வாகன வசதி இல்லாத பலர் நடைபயணமாகவே தெற்கு காசாவுக்கு செல்கின்றனர்.

இத்தகைய சூழலில், இஸ்ரேல் ராணுவத்தினர் அனைத்து போர் தளவாடங்களுடன் எல்லையில் தயார் நிலையில் காத்திருக்கின்றனர். காசா முனை மீது தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவு கிடைத்த மறுநொடியே தாக்குதலை தொடங்க ஏற்ப தயார் நிலையில் வீரர்கள் உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருக்கும் பகுதியிலேயே அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.


Next Story