இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
அதேவேளை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கடந்த 7ம் தேதி காலை திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து முதல் 20 நிமிடங்களில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தரைவழி, வான்வழி, கடல்வழியாக ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். ஆபரேஷன் அல் அக்சா வெள்ளம் என்ற பெயரில் காசா முனை அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள நகங்களுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.
இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்துள்ளனர். இஸ்ரேலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய ராணுவ தளத்தையும் கைப்பற்றினர். இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், குழந்தைகள், பெண்கள் என பலரையும் பிணை கைதிகளாக சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைகைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்கு கொண்டு சென்றனர். வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்யும் வீடியோக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சமூகவலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. மேலும், இளம்பெண்ணை கொலை செய்து அவரது உடலை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டினரும் அடக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத்தொடங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்திருந்த காசா எல்லைப்பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் தொடங்கியது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேற்குகரையில் இருந்தும் இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது. போர் தொடர்ந்து நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.