கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரிப்பு
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.
அமெரிக்காவின் ஆற்றல் தகவல் ஆணைய தரவுகளின்படி, உலகின் ஏழாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் உள்ளது. ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் 3-வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும் ஈரான் இருக்கிறது.
அந்த பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அருகேயுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடைபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஓமன் - ஈரான் இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே உலக வர்த்தகத்தில் 25 சதவீத கச்சா எண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஓபெக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இராக் ஆகிய நாடுகளும் கூட ஹோர்முஸ் நீரிணை வழியேதான் கச்சா எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வருகின்றன.