அயோத்தி ராமர் கோவிலும், தமிழகமும்...
• சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடியவர் தமிழகத்தை சேர்ந்த கே.பராசரன் என்ற மூத்த வக்கீல் தான். இவர், இந்த வழக்கில் வாதாடும் போது ராமருக்காக தனது காலில் செருப்பு அணியாமல் வாதாடினார். எனவே அவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோவில் கட்டுவதற்கு அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் தலைவராக கே.பராசரன் நியமிக்கப்பட்டார். தற்போது இவர் கோவிலின் நிரந்தர அறக்கட்டளை உறுப்பினராக உள்ளார்.
• இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள கோவில்கள்தான் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கிறது. எனவே இதுபோல ராமர் கோவிலும் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக கோவில் கட்டிட கலையை பின்பற்றி ராமர் கோவில் கட்டப்படுகிறது. அதனை கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் “தினத்தந்தி”க்கு அளித்த சிறப்பு பேட்டியில் பெருமிதத்துடன் கூறினார். இது ஒவ்வொரு தமிழனும் பெருமைக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
• ராமர் கோவிலுக்கான கதவுகள், மணிகள் போன்றவை தமிழகத்தில் இருந்து சென்று இருக்கின்றன. அதேபோல் ராமேசுவரம், திருச்செந்தூர் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தம், மதுரை, தஞ்சை, காஞ்சி, கும்பகோணம் போன்ற புராதன நகரங்களில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
• கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர்கள், சிற்பங்களை செதுக்கும் என்ஜினீயர்கள் என கட்டுமான துறையில் ஏராளமான தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.