விழாக்கோலம் பூண்ட அயோத்தி
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் 7 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அவர்கள் அயோத்திக்கு விரைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று லக்னோ சென்றடைந்தார். இன்று அயோத்தி செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார். யோகா குரு பாபா ராம்நாத், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ராம்நகரியை அடைந்தனர்
இது தவிர நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி சென்றுள்ளனர். அவர்கள் அயோத்தி நகர எல்லையில் தங்கியுள்ளனர். இதனால் நகரம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்தி நகரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே விழாக்கோலம் பூண்டது. கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மராட்டிய மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 7 ஆயிரத்து 500 அலங்கார செடிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர இரவு நேரத்தில் கோவில் வளாகம் ஜொலிக்கும் வகையில் வண்ண வண்ண மின்விளக்கு சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கிய கோவில்களும், அயோத்தி அரச குடும்ப மாளிகையான ‘ராஜ் சதன்’ ஆகியவையும் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் ஏராளமான கலைக்குழுவினர் குவிந்துள்ளனர். கோவிலுக்கு செல்லும் ராம பாதையில் ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிறிய மேடைகளில் ராமர் பாடல்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நடனம் ஆடி வருகிறார்கள். மேலும் ராமர், சீதை, லட்சுமணன் வேடம் அணிந்தவர்கள் நகரம் முழுவதும் நடனமாடி வருகிறார்கள்.