இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர்க்கப்பல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. போருக்கு மத்தயில் இஸ்ரேலுக்கு நேரில் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கு தேவையான அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என உறுதியளித்தார்.
முன்னதாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் பிராந்திய அளவில் விரிவடைவதை தடுக்கவும், பிராந்தியத்தில் இருக்கும் பிற பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கவும் ஏதுவாக போர் தொடங்கிய முதல்நாளே அமெரிக்கா மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியது. மேலும் சில போர்க்கப்பல்களை அனுப்பவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள்
இந்த நிலையில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை வீசினர்.
ஆனால் அந்த ஏவுகணைகள் இஸ்ரேலை அடைவதற்கு முன்பாக, வடக்கு செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்னி என்ற போர்க்கப்பல் அவற்றை சுட்டு வீழ்த்தின. இதன் மூலம் இஸ்ரேல் மீது நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா முறியடித்தது.