நம்பிக்கையில்லா தீர்மானம்


நம்பிக்கையில்லா தீர்மானம்
Daily Thanthi 2023-08-09 05:32:24.0

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒப்புக்கொண்டார்.

அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தொடங்கியது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் பதில் அளித்தனர்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் 2வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற உள்ளது. மக்களவை 11 மணிக்கு கூட உள்ள நிலையில் கேள்வி நேரத்திற்கு பின் மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் பேசுகிறார்.


Next Story