விழுப்புரம், கடலூரில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அம்மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்று பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். புருஷோத்தமன் நகரப் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.