லேண்டர் தரையிறங்கிய 7 கட்ட ‘திக்திக்‌’ நிமிடங்கள் ... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்...   ரோவர் செய்யப்போகும் மெகா சம்பவம்
x
Daily Thanthi 2023-08-24 00:05:38.0
t-max-icont-min-icon

லேண்டர் தரையிறங்கிய 7 கட்ட ‘திக்திக்‌’ நிமிடங்கள்

முதல் கட்டம்

லேண்டர் நிலவுக்கு நெருக்கமாக 25 கி.மீ. தொலைவிலும் தூரத்தில் 134 கி.மீ. தொலைவிலும் இயங்கி வந்த நிலையில், நிலவின் தென் துருவ பகுதியை 25 முதல் 30 கி.மீ. தொலைவில் நெருங்கும்போது நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணி மாலை 5:40 மணிக்கு நடந்தது.

அதன்படி லேண்டரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய ராக்கெட்டுகளை இயக்கி விண்கலத்தின் மேல் பகுதியில் தள்ளுவிசை கொடுக்கப்பட்டது. இந்த தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாக குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ. தூரத்திற்கு விண்கலத்தின் தூரம் குறைக்கப்பட்டது.

குறிப்பாக 25 கி.மீ. தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயான்-3 ன் வேகம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. ஆக இருந்த நிலையில் இந்தத் தள்ளுவிசை காரணமாக நிலவிற்கு அருகாமையில் 7.4 கி.மீ தூரத்திற்கு லேண்டரை இயக்கவைக்கும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1,200 கி.மீ. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது. இந்த மொத்த நிகழ்வும் 10 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

ஆக தரையிறங்குவதற்கான அந்த 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் முடிந்தது. அடுத்த 5 நிமிடங்களில் குறித்த நேரத்தில் தரையிறங்கும் முயற்சிகள் நடந்தன.

2-வது கட்டம்

முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் லேண்டர் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா? என்ற முடிவை 2-வது கட்டத்தில் எடுக்கப்பட்டது. அதன்படி 2-வது கட்டத்தில் 7.4 கி.மீ. உயரத்தில் இருந்த விண்கலத்தை படிப்படியாகக் 6.8 கி.மீ. உயரத்திற்கு நிலவை நோக்கி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் லேண்டர் கால்களை தரையிறங்க வசதியாக கீழ்நோக்கித் திருப்ப பக்கவாட்டில் அமைக்கப்பட்ட கால்களை சுமார் 50 டிகிரி அளவுக்குத் திருப்பும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குறிப்பிட்ட 2-வது கட்டத்தில் தான் விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவி அதன் பாதையை படம் பிடித்துக் கொண்டே சென்றது. அது எடுக்கும் படங்களை, அதில் பதிவேற்றி வைத்துள்ள படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையை கண்டறிந்தது.

3-வது கட்டம்

அந்த படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து பாதுகாப்பாக செல்ல அந்த செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கியது. தொடர்ந்து நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு விண்கலம் இருக்கும் வகையில் அதைக் கீழே படிப்படியாக இறக்கியது.

பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட லேண்டர் கால்களை நேராக நிலவை நோக்கி இறங்கும் வகையில் இயக்கப்பட்டு மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த விண்கலத்தை நிலவுக்கு அருகில் 800 மீட்டர் உயரத்தை அடையும்போது வேகத்தை பூஜ்ஜியம் ஆக்கும் வகையில் பிரேக் பயன்படுத்தப்பட்டது.

4-வது கட்டம்

விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேர்ந்தது.

இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் ராக்கெட் விசை முழுமையாக குறைக்கப்பட்டு விண்கலம் 150 மீட்டர் உயரத்திற்கு வந்தது. தொடர்ந்து விண்கலம் குறிப்பிட்ட இந்த உயரத்திற்கு வந்ததும் 22 நொடிகளுக்கு அந்தரத்தில் அப்படியே மிதந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் விண்கலத்தில் இருக்கும் ‘இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள்' வேலை செய்யத் தொடங்கியது. தரையிறங்கிய விண்கலத்தின் 4-கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ, குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்துவிடக்கூடும். இத்தகைய இடர்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து செயற்கை நுண்ணறிவு கருவியை சரியான பாதையை நோக்கி இயக்கும் முயற்சி நடந்தது. இதனிடையே நிலா தனது ஈர்ப்புவிசையால் விண்கலத்தைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. அதற்கு சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுத்தது. இதன் மூலம் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

5-வது கட்டம்

150 மீட்டரில் இருந்து விண்கலத்தை நிலவிற்கு நெருக்கமாக 60 மீட்டர் உயரத்திற்கு கீழே இறக்கி எந்த இடத்தில் தரையிறங்க வேண்டுமோ அந்த இடத்தில் ராக்கெட்டின் விசையை முழுமையாக குறைக்கப்பட்டது.

நிலாவினுடைய ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, மெல்ல மெல்ல காற்றில் மிதந்து விழும் இறகை போல விண்கலம் கீழ்நோக்கிச் சென்றது. பாதுகாப்புடன் தரையிறக்குவதற்கான இந்த நிலையில் விண்கலத்தில் பொருத்தப்பட்ட லேசர் டாப்லர் வெலாசி மீட்டர் என்ற புதிய கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பி அதன் பிரதிபலிப்பை பொறுத்து கூடுதலான வேகம் இல்லாமல் லேண்டரை பாதுகாப்பாக தரையிறங்க செயற்கை நுண்ணறிவு கணினி வேலை செய்தது.

6-வது கட்டம்

தொடர்ந்து 60 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு விண்கலத்தை மேலும் நெருக்கமடைய செய்யப்பட்டது.

இதில் விண்கலத்தின் கீழ்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இது தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்தவாறு இயக்கப்பட்டது. அதன்படி நிலவின் தரை பரப்பு எவ்வாறாக இருக்கிறது? என்பது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு

அதிக வேகத்தில் விண்கலம் கீழே இறங்காமல் மென்மையாக தரையிறங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

7-வது கட்டம்

தொடர்ந்து இந்த கட்டத்தில் விண்கலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் இருந்து விண்கலம் நிலவில் மெதுவாக பாதுகாப்பாக தரையிறங்கும் அந்த தருணத்தில் நிலவின் மண் தூசி உள்ளிட்ட புழுதி படலங்கள் வேகமாக எழுந்து விண்கலத்தை பாதிக்கும் என்பதால், விண்கலத்தின் உள்ள ராக்கெட் முழுவதுமாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. நிலவின் ஈர்ப்பு விசையை பொறுத்து தரையிறக்கப்பட்டது. அப்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும் கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையிறங்கி கலனின் கால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

விண்கலத்தின் “திக்... திக்...” நிமிடங்கள்

முதல் கட்டம் முடிந்த பிறகு, 2-வது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்த விண்கலம் 7-வது கட்டத்திற்கு அதாவது வெறும் 10 மீட்டர் உயரத்திற்கு வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆனது. இந்த நேரத்தைத்தான் விண்கலத்தின் “திக்... திக்... நிமிடங்களாக” விஞ்ஞானிகள் கருதினர். தொடர்ந்து இறுதி கட்டமாக லேண்டர் பாதுகாப்பாக நிலவில் தரையிறங்கிய பின் நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசுக்கள் அடங்கும் வரை காத்திருந்தது. லேண்டர் அதன் பின்னர் ரோவரை பிடித்து மெதுவாக நிலவில் கீழிறக்கியது.

தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை மாறி மாறி புகைப்படத்தை எடுத்துக்கொண்டபின் ரோவர் தனது சக்கர கால்கள் மூலம் நிலவு பரப்பில் ஊர்ந்து சென்று நிலவை கண்காணித்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தொடங்கியது.

பூமியின் 14 நாட்கள் நிலவு பரப்பின் ஒரு பகல் என்பதால் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் சந்திரயான் 3 விண்கலம் அடுத்த 14 நாட்கள் நிலவின் தென் துருவத்தில் பகல் பொழுது என்பதால் தனது சோலார் பேனல் உதவியுடன் லேண்டர் மற்றும் ரோவர் மூலமாக ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறது.


Next Story