நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் கூட... விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் தகவல்
சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது முதல் நேற்று மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது வரை நிலவு பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் இஸ்ரோ ‘எக்ஸ்’ (டுவிட்டர்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது. இந்த பதிவுகள் அனைத்தும் இணைய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக இஸ்ரோ பயன்படுத்திய சொற்கள் பல கோடி இணைய ஆர்வலர்களின் இதயங்களை வென்றன.
கடந்த திங்கட்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை அதன் முன்னோடியான சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் முறைப்படி வரவேற்றதை விளக்கும் விதமாக இஸ்ரோ டுவிட்டரில் “வரவேற்கிறேன் நண்பா. இருவருக்கும் இடையே இருவழி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது” என வெளியிட்ட பதிவு குறுகிய நேரத்திலேயே 30 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை ஈர்த்தது.
அதேபோல் கடந்த 17-ந் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியதை குறிப்பிட்டு, “சவாரிக்கு நன்றி, நண்பா” என விக்ரம் லேண்டர் சந்திரயான்-3 விண்கலத்திடம் கூறுவதுபோல இஸ்ரோ டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்த பதிவு சில நிமிடங்களிலேயே 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது.
இந்த நிலையில் நேற்று மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பியது. அது குறித்தும் இஸ்ரோ டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டது.
அந்த பதிவில், “சந்திரயான்-3 திட்டம்: இந்தியா, நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் கூட” என விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் தகவலை இஸ்ரோ குறிப்பிட்டிருந்தது.