இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து துபாய் - அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2018ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் நாளை கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இதனைதொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி அபுதாபியில் 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்க்கிறார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
இன்றைய நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாளை துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.