சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.
சென்னை,
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் சிறப்பு ரெயில் நடைமேடை 11 க்கு வந்தடைந்தது.
சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.
முன்னதாக ரெயிலில் வந்த பயணிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
பயணிகளை அவரவர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல 50 பாஸ்ட் டிராக் வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. ரெயிலில் வரும் தாய் மற்றும் சேய்களுக்கு தயாராக இருக்கும் 5 தாய், சேய் ஊர்திகள் வந்திருந்தன.
காயமடைந்த பயணிகளை ஒமந்தூரார், ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்ல அறிவுத்தப்பட்டிருந்தனர்.
காயமடைந்த பயணிகள் B2 மற்றும் B3 - A/C பெட்டிகளில் வந்தனர். அதில் பலருக்கு காலில் காயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சென்னை ரெயில் நிலையத்திற்கு வெளியே போலீசார், டிடிஆர்எப் மற்றும் கமாண்டோக்கள் காத்திருந்தனர். மேலும் ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நின்றன.