ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் - இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், மத்திய கிழக்கின் நிலைமை குறித்தும் விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் கூடியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல் கூட்டத்தில் பங்கேற்ற உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தின.
ஆனால் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. மேலும் ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் எனவும் சூளுரைத்தது. இது குறித்து பேசிய இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், “அக்டோபர் 7-ல் ஹமாஸ் அமைப்பினர் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு சரியான பதிலடி, ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது ஆகும். ஹமாஸை அழிப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமல்ல. இது எங்கள் கடமை'' என்றார்.
அதன்படி காசா மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நேற்று மேலும் தீவிரப்படுத்தியது. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காசாவில் இதுவரை 5,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுமார் 2,300 பேர் குழந்தைகள் ஆவர்.